பெண்ணிடம் பெற்ற பணத்தைத் திரும்ப அளிக்காத புகார்; அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

பெண்ணிடம் பெற்ற பணத்தைத்  திரும்ப அளிக்காத புகாரில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  சென்னையைச் சேர்ந்த பானுமதி என்பவர்…

பெண்ணிடம் பெற்ற பணத்தைத்  திரும்ப அளிக்காத புகாரில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னையைச் சேர்ந்த பானுமதி என்பவர் கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கு ஒன்றுக்காக எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையம் சென்ற போது இவருக்கும், உதவி ஆய்வாளராக பணியாற்றிய வீரமணிக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மகளின் திருமண செலவுக்காகக் கடன் பெறுவதற்கு உத்தரவாதம் வேண்டும் எனக்கோரி பானுமதியிடம் வெற்றுத்தாள் மற்றும் வங்கி காசோலையில் கையெழுத்து பெற்று 35 லட்சம் ரூபாய்க் கடன் பெற்றுள்ளார். மேலும், பானுமதியிடமிருந்து 13 சவரன் நகை மற்றும்  பத்து லட்சம் ரூபாய் பணமும் தனியாக வாங்கியுள்ளார்.
கடன் பெற்ற உதவி ஆய்வாளர் வீரமணி,  முறையாகத் திரும்பச் செலுத்தாத நிலையில் பணத்தைத் திரும்ப அளிக்குமாறு பானுமதி, உதவி ஆய்வாளர் வீரமணியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், தற்போது  பணம் இல்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் பணத்தைத் திருப்பி கேட்டால் பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவதாக  உதவி ஆய்வாளர் வீரமணி மிரட்டியுள்ளார். இந்நிலையில், அந்த பெண் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகாரளிக்க அந்த புகார் தரமணி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பானுமதி தரமணி காவல் நிலையம் சென்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த தரமணி காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளர் தேவராஜ், நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் வேண்டுமானால் நீதிமன்றம் செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணம் கோரி பானுமதி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்தார். விசாரணையின் போது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளைச் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மறுத்தனர்.
இந்த புகாரை விசாரித்த  மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு உள்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும், இந்த தொகையை உதவி ஆய்வாளர் வீரமணி மற்றும் ஆய்வாளர் தேவராஜிடம் வசூலிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.