அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டைத் தடுக்க புகார் பெட்டி
வைக்கப்படும். புகார்கள் மீது வாரம் ஒரு முறை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி பணிகள் தொடர்பான
விவசாயிகளுடன் கலந்து ஆலோசனை கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து நெல் கொள்முதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் கடந்த கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தற்போது வரை 5.61 லட்சம் விவசாயிகளிடமிருந்து 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 8103 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்று 14 மாதங்களில் தகுதி உள்ளவர்களுக்கு 12 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளை முதல்வர் கொடுத்த வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. நிரந்தரக் கடைகள் 10 லட்சம் ரூபாயிலும், தற்காலிக கடைகள் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலும் கழிவறைகள் வசதியுடன் கட்டப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை மத்திய அமைச்சர் ஃபயூஸ் கோயல் பாராட்டி உள்ளார்.
5 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமிப்பதற்கான கிடங்குகள் நிறுவ முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லை சேமிக்கும் வகையில் கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. நவீன அரிசி அரவை ஆலை அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் பல்வேறு இடங்களில் அரவை ஆலைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நவீன அரிசி ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. ஒப்பந்த முறையில் அரிசி அரைப்பதற்கான தனியார் மில்லுகளின் எண்ணிக்கை 638 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல அனைத்து மில்லுகளிலும் கருப்பு மற்றும் பழுப்பு நிற அரிசிகளை நீக்கும் வகையில் கலர் சார்ட்டிங் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தரமான அரிசி கிடைப்பதற்கான நிலை உருவாகியுள்ளது.
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் காவலர் முதல் பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கபட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை களைய ஒரு புகார் பெட்டி வைக்கப்படும். புகார் பெட்டியில் உள்ள முறைகேடாக இருந்தாலும் அதனை மனு மீது வாரம் ஒரு முறை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பார். புகார் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் இலவச தொலைபேசி எண்கள் அடங்கிய பெயர் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை மற்றும்
மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், உணவு நுகர்வோர் மற்றும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.








