அரசியல் தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு போஸ்டர்கள் அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்த வகையில் உள்ளனர். மதுரை உள்பட ஒரு சில இடங்களில் விஜய்யை அரசியல் தலைவர்களுடன் ஒப்பிட்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருசிலர் ஆர்வ மிகுதியால் விஜய்யை, பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை விஜய் படங்களோடு இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய செயல்களில் ரசிகர்களும், இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஈடுபடக் கூடாது என அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், அப்படியே தொடர்வது வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார். இது போன்ற செயல்களை விஜய் என்றும் விரும்புவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், விஜய்யின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விஜய் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.








