கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற சிஎஸ்கே

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐ.பி.எல் தொடரின் 38வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இதில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.…

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐ.பி.எல் தொடரின் 38வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இதில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளிப்பார்கள் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சுப்மான் கில் 9 ரன் அவுட்டாகி வெளியேறினார்.

 

அவரையடுத்து வெங்கடேஷ் ஐயரும் 18 ரன்னில் தோனி கையில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இவர்களைத் தொடர்ந்து வந்த திரிபாதி மட்டும் (45) நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கேப்டன் மோர்கன் 8 ரன்னில் வெளியேறினார். அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் ராணா 37 ரன்னில் வெளியேற, ரஸ்ஸல் 20 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழந்து 171 ரன்கள் சேர்த்திருந்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிசிஸ் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு சிறப்பான தொடக்கம் அளித்தனர். ருதுராஜ் 40 ரன்களும், டு பிளிசிஸ் 43 ரன்களும் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் வந்த மொயின் அலி தன் பங்கிற்கு 32 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். ராயுடு 10 ரன்னிலும், ரெய்னா 11 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

சென்னை அணி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி 1 ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் ரசிகர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக ஜடேஜா களமிறங்கி கொல்கத்தா அணி வீரர்களின் பந்துகளை மைதானத்தின் நாளாபுறமும் சிதறடித்தார்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் சென்னைக்கு 4 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 3வது பந்தில் சென்னை அணிக்கு 3 ரன்கள் கிடைத்தது. 4வது பந்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில், 5வது பந்தில் ஜடேஜா எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி தந்தார். இதனால், கடைசி பந்தில் சென்னை அணி 1 ரன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ரசிகர்கள் இருக்கை நுணிக்கு வந்த ஆட்டத்தை கவனிக்க பதற்றம் தொற்றிக் கொண்டது. இறுதி பந்தில் தீபக் சஹார் 1 ரன் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் சென்னை அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.