முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Breaking News

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 88 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

தா.பாண்டியன், கடந்த இரண்டு வருடங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அதற்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் டயலிஸிஸ் சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார்.

கடந்த வாரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வந்த தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 88.

1932ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி உசிலம்பட்டியில் பிறந்த தா.பாண்டியனின் இயற்பெயர் டேவிட் பாண்டியன். அழகப்பா பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக முதலில் பணியாற்றிய அவர் பின்னர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக மாறினார்.

1989 மற்றும் 91ஆம் ஆண்டு வட சென்னை தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 3 முறை இருந்துள்ளார்.

தனியாத இலக்கிய தாகம் கொண்டவராக பல இலக்கிய நூல்களை எழுதியதோடு, கம்யூனிஸ நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்   தா.பாண்டியன். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் பேச்சுக்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டபோது அவருக்கு மொழிபெயர்ப்பாளராக சென்ற தா.பாண்டியனும் படுகாயமடைந்தார்.

அரசியலிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் மிக மூத்த தலைவரான  தா.பாண்டியன், தமிழகத்தின் அனைத்து தலைவர்களோடும் நெருக்கமாக பழகியவர். தன்னுடைய கருத்தில் உறுதியாகவும் அதே சமயத்தில் எதிர் கருத்துடையவர் ரசிக்கும் வகையில் அதை எடுத்து வைக்கக் கூடியதில் ஆற்றல் வாய்ந்தவர்.  இடையே ஐக்கிய பொதுவுடமைக் கட்சியில் இருந்த அவர், பின்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இணைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு வரை பொதுவாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தா.பாண்டியன் மறைவு தமிழக அரசியலிலும், இடதுசாரி இயக்கத்திலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisement:
SHARE

Related posts

இன்றைய போட்டியில் புதிய சாதனை படைப்பாரா ஹிட்மேன் ரோகித்!

Saravana Kumar

‘பல்வேறு விவகாரங்களில் பொய் பேசும் முதல்வர்’: டிடிவி தினகரன் விமர்சனம்

Ezhilarasan

தமிழ்நாட்டிற்கு 33.9 டிஎம்சி தண்ணீர்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

Ezhilarasan