இமாச்சலில் பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும்- ஜெ.பி.நட்டா

இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அம்மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் விரைவில் தேர்தல்…

இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அம்மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 68 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்திற்கு வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 413 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு டிசம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியும் களம் காண்கிறது.

நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா,  உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஜெ.பி.நட்டா பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில், தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் பொதுசிவில் சட்டம் அமலாகும். மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 புதிய மருத்துவ கல்லூரிகள் நிறுவப்படும். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கப்படும். அனைத்து மாவட்டத்திலும் 2 பெண்கள் விடுதிகள் அமைக்கப்படும்.

8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்குவதில் உள்ள முரண்பாடுகள் நீக்கப்படும். பணியின் போது உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகை அதிகரிக்கப்படும். அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, ஆப்பிள் விவசாயிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதமாக நிர்ணயிக்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.