முக்கியச் செய்திகள் இந்தியா Breaking News

காமெடி டூ அரசியல் பயணம்

காமெடி டூ அரசியல் பயணம்

காமெடியனாக இருந்து பஞ்சாப் மாநில முதலமைச்சராக உயர்ந்துள்ள பக்வந்த் மானின் அரசியல் பயணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

➽பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நாட்டிலேயே முதன்முறையாகச் சற்று வித்தியாசமான முறையில் முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்வு செய்தது ஆம் ஆத்மி கட்சி.

➽இலவச அலைபேசி எண் அறிவித்து, அதன் மூலம் வாக்காளர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி பக்வந்த் மான் என்பவரைப் பஞ்சாப் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால்.

➽1973ம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சதோஜ் கிராமத்தில் பிறந்தார் பகவந்த் மான்.

➽ஆசிரியரின் மகனான இவரை அவரின் தந்தை ஆசிரியராக்கிப் பார்க்கவேண்டும் என்றே ஆசைப்பட்டார். ஆனால் மானின் விருப்பம் வேறு மாதிரி இருந்தது. பஞ்சாப் மக்கள் மத்தியில் ஓர் அரசியல்வாதி என்பதை விட, நகைச்சுவை நடிகராகவே அறிமுகமானார் பக்வந்த். கல்லூரி பருவத்திலிருந்தே ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னை மேம்படுத்தி கொண்டார்.

➽பக்வந்த்தின் தனிச் சிறப்பு அவரின் அரசியல் நக்கல் நிறைந்த காமெடிகள் தான். பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலின் நடப்பு நிகழ்வுகளை மக்கள் முன்னிலையில் காமெடியாக நடித்து காண்பிப்பதில் வல்லவர். இந்த மாதிரியான அணுகுமுறை அவரை மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது என்று தான் குறிப்பிட வேண்டும்.

➽கல்லூரி நாட்களில், இடதுசாரிகளின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டபோதிலும் அவர் எந்தக் கட்சியிலும் உறுப்பினராகவில்லை. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் மன்பிரீத் பாதல் பஞ்சாபில் மக்கள் கட்சியை உருவாக்கியபோது பக்வந்த் மான் அரசியலில் களம் கண்டார். பஞ்சாப் மக்கள் கட்சியின் (பிபிபி ) நிறுவனத் தலைவர்களில் இவரும் ஒருவர். தொடர்ந்து, 2012-ம் ஆண்டு மக்கள் கட்சி சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

➽பின்னர், 2014-ம் ஆண்டு ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி டெல்லியில் ஆட்சியைப் பிடித்த அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அதே ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சங்ரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் பகவந்த் மான்.

➽சிரோமணி அகாலி தளம் – பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தவிர்த்து, மூன்றாவது ஒரு கட்சியிலிருந்து சங்ரூரில் வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்ற ஒரே தலைவர் பக்வந்த் மான் மட்டுமே. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவராக பக்வந்த் மான் உருவெடுத்தார்.

➽அதே நேரத்தில், மதுப்பழக்கம், நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு விஷயங்களை வீடியோ எடுத்த விவகாரம், மனைவியைப் பிரிந்த விவகாரம் என பக்வந்த் மீதான சர்ச்சைகளும் ஏராளம். இந்த சர்ச்சைகளை தாண்டி கெஜ்ரிவால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முக்கிய காரணம் அவரின் அரசியல் செயல்பாடுகள். கடந்த சில தேர்தல்களில் பக்வந்த் செயல்பாடுகளால் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

➽நடந்து முடிந்துள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான வெற்றி பெற்று டெல்லியை தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக பஞ்சாப்பில் ஆட்சியமைத்துள்ளது. புதிய முதல்வராகி இருக்கும் பக்வந்த் மான் கட்சி மற்றும் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா என்பது அவரது செயல்பாடுகளைப் பொறுத்தே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

Vandhana

நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய மூதாட்டி – உதவிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

Arivazhagan CM