மருத்துவக் கல்லூரியில் ராகிங் செய்த மாணவர்களை, ஏகன் படத்தில் வரும் அஜித் போல் சென்று கைது செய்த இளம் பெண் காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியான மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை மிக மோசமாக ராகிங் செய்வதாக யுஜிசி எனப்படும் பல்கலை மானிய குழுவின் உதவி மையத்திடம் மாணவர் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து, ராகிங் பற்றி விசாரிக்க கல்லூரி நிர்வாகம் கடந்த ஜூலை 24ம் தேதி போலீசாரிடம் புகார் அளித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராகிங் குறித்து விசாரித்த போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் புது யுக்தியை கையாண்டனர். அதன்படி 24 வயது பெண் காவலர் சாந்தினி சவுகான் என்பவரை மருத்துவ மாணவி போல் கல்லூரிக்கு அனுப்பினர்.
அவருடன் செவிலியராக ஒருவரும், கேன்டீன் பணியாளர்களாக இரு பெண்கள் என மூன்று பெண் காவலர்களையும் கல்லூரிக்கு அனுப்பினர். இதனையடுத்து அவர்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து அனைத்து விவரங்களையும் மாணவர்களுடன் மாணவர்களாக பழகி சேகரித்தனர். இவர்கள் இணைந்து நடத்திய விசாரணையில், முதலாமாண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் 11 பேர் ஆபாசமான வகையில் ராகிங் செய்ததை உறுதி செய்தனர்.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அளித்தனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் மூன்று மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இதேபோல உத்தரகாண்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியிலும் ராகிங்கில் ஈடுபட்ட 44 மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கல்லூரி விடுதியை விட்டு உடனடியாக கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது. மீதமுள்ள 43 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாணவி வேடத்தில் மருத்துவக்கல்லூரிக்கு சென்று ராகிங்கை கண்டுபிடித்த பெண் போலீசுக்கு பாராட்டு குவிந்துள்ளது.