கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறையில் உருவாக்கப்பட்ட படகு இல்லம் திறக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வராததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே படகு இல்லமை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளிகள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சுமார் ரூ.5.6 கோடி திட்ட மதிப்பீட்டில் தாவரவியல் பூங்காவும், ரூ.4.75
கோடியில் படகு இல்லமும் அமைக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடைந்தன.
கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய பணிகள் 90 சதிவீத பணிகள் முடிந்ததும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக ஆட்சிக்காலத்தில்
தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்தும் கூட இன்னமும் திறக்கப்படாமல் உள்ளது.பல லட்சம் செலவில் வாங்கப்பட்ட படகுகள் வெயிலில் காய்ந்து வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
மேலும் படகு இல்லத்தில் நிரப்பட்ட தண்ணீரும் நீண்ட நாட்கள் ஆனதால் துர்நாற்றம் அடைந்து காணப்படுகிறது.இதனால் சுற்றுலாப் பயணிகள் பலர் படகு இல்லத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே படகு இல்லப்பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
—-வேந்தன்







