கோவையில் புகையிலை விற்பனை செய்த 170 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய இணைய வழி புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மைய இயக்குனர் குகன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து புத்தகத்தை வெளியிட்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன் கூறியதாவது, என்னதான் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், அதனை கட்டுப்படுத்துவது சவாலான ஒன்றாக மறுபுறம் உள்ளது. இதுவரை கோவையில் மட்டும் 2000 கிலோ அளவிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 275 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரையரங்கில் விளம்பரப்படுத்தப்படும் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகம் பதிகிறது, ஆனால் அது புகையிலை பிடிப்பவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தற்போது பள்ளி,கல்லூரி மாணவர்கள் பலர் போதைப்பொருள் பழக்கத்திற்கு
உள்ளாவது வேதனை அளிக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கார்டூன் வடிவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புதியதாக துவங்கப்பட்ட சுந்தராபுரம் காவல் நிலைய சரகத்தில் மட்டும் 400 கிலோ அளவிலான புகையிலை பிடிக்கப்பட்டுள்ளது.அது கூலிப் என்ற போதைப்பொருளாகும்.இது பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுவதற்காக கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் போதை பொருட்கள் பயன்படுத்துவது அதிகமாக உள்ளது. அவர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.புகையிலை விற்பனை செய்யும் ஒரு கடையை மூடினால் மற்றொரு கடை அதே பகுதியில் உருவாகிறது. குறைந்த முதலீடு அதிக லாபம் தான் இதற்கு காரணம் .மேலும் அவர் கூறுகையில் புற்றுநோய் காரணமாக வருடத்திற்கு சராசரியாக 9 லட்சம் பேர் இறக்கின்றனர் என கூறினார்.







