நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தேயிலை தோட்டத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த கன்றுகுட்டியை சிறுத்தை வேட்டையாடி சென்றது. சிறுத்தையினை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. இங்கு தேயிலை பறிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
இங்குள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. வன விலங்குகள் அவ்வப்போது இரைத் தேடி ஊருக்குள் வருகின்றன. அவ்வாறு வரும் வன விலங்குகள் கால்நடைகளை வேட்டையாடுவது,மனிதர்களை தாக்குவது போன்றவை தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் காளிதாசன் என்பருக்கு சொந்தமான கன்றுக்குட்டி ஒன்று அப்பகுதியிலுள்ள தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு உலா வந்த சிறுத்தை கன்றுக்குட்டியை வேட்டையாடி சென்றது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தனிப்படை அமைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.
சிறுத்தையை பிடிக்கும்வரை பொதுமக்கள் யாரும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் வனத்துறையின் சார்பாக அறிவுறுத்தியுள்ளனர். விரைவாக சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும்படி பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வேந்தன்







