கோவை அதிமுகவின் இரும்பு கோட்டை. இனி எந்த தேர்தல் வந்தாலும் கோவை மாவட்டத்தில் நாம் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை சுகுணா கலையரங்கத்தில் பாரட்டுவிழா நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மலர் மாலை அணவித்து மகுடம் சூட்டி செங்கோல் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எவ்வளவோ பிரச்சனைகளை நாம் சந்தித்து இருக்கிறோம். என்னை அதிமுக பொதுச்செயலாளராக ஏகமதமாக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. திமுக என்றால் கருணாநிதி குடும்பம் தான் ஆட்சி புரியும். கட்சி பதவியில் இருக்க முடியும்.
திமுகவில் மூத்த அமைச்சர்கள் பேசுகிறார்கள். கருணாநிதியுடன் இருந்தேன், ஸ்டாலினுடன் இருக்கிறேன், உதயநிதியுடன் இருப்பேன், அடுத்து இன்பநிதியுடன் இருப்பேன் என அடிமை சாசனத்தை இன்றைக்கு எழுதி கொடுத்திருக்கிறார்கள்.
ஜனநாயக அமைப்புள்ள ஒரே கட்சி இந்தியாவில் அதிமுக மட்டும் தான். அண்ணா காலத்திலிருந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு சாதாரண தொண்டனையும் மதிக்கின்ற கட்சி அதிமுக. திமுக கம்பெனி போல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதன் சேர்மன் ஸ்டாலின், டைரக்டாக இருக்கிறவர்கள் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின். ஸ்டாலின் குடும்பத்தையும் அதிமுக குடும்பத்தையும் பாருங்க. எது சேவை செய்கிறது என்பது தெரியும்.
இரண்டு ஆண்டுகளை நெருங்கியுள்ள திமுக ஆட்சி எப்போது வீழும், அகலும் என மக்கள் குரல் தமிழகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஊழல் என்றால் திமுக, திமுக என்றால் ஊழல் ஊறிப்போன கட்சி.
அதிமுக என்ற பேரியக்கம் இனி வெற்றி என்ற முழக்கத்தை மட்டுமே முன்னெடுக்கும். ஸ்டாலின் செய்யும் வேலை அதிமுக தொண்டன் மீது வழக்கு போடுவது தான். மக்கள் அல்லல்படும் காட்சி திமுக ஆட்சியில் பார்க்கிறோம்.
கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தார்கள். நான் முதல்வராக இருந்தபோது விரிவான திட்டத்தை தயார் செய்தோம். பிறகு ஆட்சி மாற்றம் வந்தது. ஏதோ ஸ்டாலின் வந்து மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது போல் போலியான பிம்பத்தை காட்டுகிறார். கோவை மெட்ரோ ரயில் அதிமுக கொண்டு வந்த திட்டம்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த திட்டத்தை கொண்டு வந்தார்கள்? வரி ஏற்றியது தான் திமுக தான் செய்த சாதனை. ஒரு புதுத்திட்டமாவது கோவை மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளார்களா? இவர்கள் ஒரு கவர்ச்சிகரமான அரசியல். ஸ்டாலினின் பினாமி அமைச்சர், பல கட்சிக்கு போய்ட்டு வந்த அமைச்சர் ஒரே ஆண்டில் இரண்டு சின்னங்களில் நின்று வெற்றி பெற்றவர். கோவையில் வந்து கொள்ளையடித்து மக்களை ஏமாற்றி வருகிறார்.
கோவை மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். இப்போதே தேர்தல் பணியை தொடங்க வேண்டும். இனி எந்த தேர்தல் வந்தாலும் கோவை மாவட்டத்தில் நாம் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.







