உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 4வது முறையாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு முதல் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில், இதற்காக 149 நாடுகள் கணக்கெடுப்பில் எடுத்து கொள்ளப்படுகின்றன. இந்த பட்டியலில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, சுகாதார வாழ்க்கை, சொந்த வாழ்வை முடிவு செய்யும் சுதந்திரம், மக்கள் தொகை மற்றும் ஊழல் அளவு ஆகியவை அளவுகோல்களாக கொண்டு கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.
மேலும், மக்களை நேரடியாக சந்திப்பதன் வாயிலாகவும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விபரங்கள் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், 55 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பின்லாந்து தொடர்ச்சியாக 4வது முறையாக முதலிடத்தில் உள்ளது.
இதனை தொடர்ந்து டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில், அண்டை நாடுகளான பாகிஸ்தான் 103வது இடத்திலும், இலங்கை 126வது இடத்திலும் உள்ளன. 140.66 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவுக்கு இந்த பட்டியலில் 136வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசிக்கு தள்ளப்பட்டு 149வது இடத்தில் உள்ளது.







