கோவையில் உதவி ஆய்வாளருக்கு எதிராக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்ததாக எழுந்த புகாரில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட இளைஞர், உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் நவீன், நண்பர்களுடன் இரவு நேரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சையது அலி, கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கண்டித்து சீக்கிரம் வீடுகளுக்குச் செல்லும்படி அறிவுறுத்தினார். அப்போது இளைஞர்களுக்கும், உதவி ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நவீன் தனது வாட்ஸ் ஆப்பில் மாரி திரைப்படத்தில் வரும் சில காட்சிகளை ஸ்டேட்டஸ் ஆக வைத்ததாக தெரிகிறது.
இந்த ஸ்டேட்டஸ், போத்தனூர் காவல்நிலைய எஸ்ஐக்கு அர்ப்பணிப்பு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தாகத் தெரிகிறது. இது சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளரின் கவனத்துக்கு போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நவீனை தொடர்பு கொண்டு காவல் உதவி ஆய்வாளர் கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த நவீன், வீட்டில் தனிமையில் இருக்கும்போது விஷம் குடித்துஉயிரிழப்புக்கு முயன்றுள்ளார். அவரை அவரது பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.







