விதிகளின்படியே தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் முத்தழகுபட்டியில் நடைபெற்ற பொது நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டுறவு சங்கங்களில் காசோலை வழங்குகின்ற அதிகாரத்தை தலைவரிடம் இருந்து பறித்து விட்டதாக எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார்.
கூட்டுறவு சங்கங்களின் விதிகளின் படியும், அதன் துணை விதிகளின் படியும் அன்றாட பணிகளில் காசோலையில் கையெழுத்து போடுகின்ற முழு அதிகாரமும் சங்கத்தின் செயலாளருக்கு உள்ளதாக ஐ.பெரியசாமி குறிப்பிட்டார்.
ஒரு சில சங்கங்களில் செயலரும் அவருக்கு அடுத்த பதவி நிலையில் உள்ள அரசு அதிகாரியும் சேர்ந்து தான் கையெழுத்து போட வேண்டும் என்பது கூட்டுறவு சங்கத்தின் சட்டத்தில் உள்ள விதி என்றும் ஐ.பெரியசாமி தெரிவித்தார். தலைவர் என்பது கெளரவ பதவிதான் என்றும், கூட்டுறவு சங்கத்தின் செயலாளருக்குதான் முழு அதிகாரம் உள்ளதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.







