என் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா காலத்தில் பணியாற்றினேன் – முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

என் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா காலத்தில் பணியாற்றினேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று (புதன்கிழமை) இரவு கோவை வந்தார். வியாழக்கிழமை கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…

என் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா காலத்தில் பணியாற்றினேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று (புதன்கிழமை) இரவு கோவை வந்தார். வியாழக்கிழமை கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், மாலை நீலகிரி மாவட்டம் ஊட்டி சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு திமுகவினர் பிரமாண்ட வரவேற்பை கொடுத்தனர். ஊட்டியில் தோடர் பழங்குடியினர் மக்களுடன் இணைந்து ஸ்டாலின் நடனமாடினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் அவருடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டு உரையாற்றிய ஸ்டாலின், ‘ தலைவர் கருணாநிதி ஆட்சியில் எப்படி இங்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தோமோ அதுபோலவே நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவோம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்திருந்தோம். அதை ஏற்றுக் கொண்டு இது எப்பொழுதும் திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளீர்கள். தமிழ்நாட்டில் இப்போது திமுக ஆட்சி. உங்கள் ஆட்சி. நம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதலாண்டு முடிந்து இரண்டாவது ஆண்டில் நடைபோட்டு கொண்டிருக்கிறோம்.

தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதிகளில் 100க்கு 70% வாக்குறுதிகளை ஒரே ஆண்டில் நிறைவேற்றிய ஆட்சி நம்முடைய ஆட்சிதான். உங்கள் ஆட்சி. இப்படிப்பட்ட ஆட்சியை உருவாக்கித்தந்துள்ள உங்களுக்கு நன்றி சொல்ல இங்கு வந்திருக்கிறேன். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்தது. நம் ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா வைரஸ் எப்படியெல்லாம் மக்களை வாட்டி வதைத்தது என நமக்கு தெரியும்.

எத்தனை உயிரிழப்புகள், எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர், எத்தனை குடும்பங்கள் சீரழிந்தன என உங்களுக்கு தெரியும். அப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் தான் நாம் ஆட்சி பொறுப்பை ஏற்றோம். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கொரோனா நோயில் இருந்து விடுபட வேண்டும் என்று சபதம் எடுத்தோம். என் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல், கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா வார்டுக்கு நேரடியாக சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறி வந்தவன் நான். கொரோனாவை நாம் இப்படி எப்படியெல்லாம் கட்டுப்படுத்தினோம் என உங்களுக்கு தெரியும்.

அது முடிந்தவுடன் பெருமழை வெள்ளத்தை எப்படி சமாளித்தோம் எனவும் தெரியும். 10 வருடம் ஆட்சியில் இருந்தால் என்ன செய்திருக்க முடியுமோ அதை ஒரு வருடத்தில் செய்து காட்டியிருக்கிறோம். அதனால்தான் அதைத்தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் எங்களுக்கு தமிழ்நாடு மக்கள் மிகப்பெரிய வெற்றியை தேடிதந்திருக்கிறீர்கள். அதற்கும் நன்றி சொல்லத்தான் இங்கு வந்துள்ளேன். எப்போதும் திமுகவுக்கு ஆதரவளிக்கும் உங்களுக்கு நன்றி’ என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.