ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகர் தள்ளியதால் நடைமேடைக்கும், தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கி காயமடைந்தவருக்கு 10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தெற்கு ரயில்வேக்கு மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். கடந்த 1998-ம் ஆண்டு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு பயணம் செய்யும் போது பயண சீட்டு பரிசோதகர் முன்பதிவு பெட்டியில் ஏறிய மாரியப்பனை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிய மாரியப்பன் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், அவர் சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மாரியப்பனுக்கு தென்னக ரெயில்வே 10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தெற்கு ரயில்வே பொது மேலாளர், மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் நீதிபதி சுப்பையா மற்றும் உறுப்பினர் வெங்கடேச பெருமாள் ஆகியோர், மாரியப்பனுக்கு 10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சரியானது தான் என தெரிவித்தனர். மேலும் தெற்கு ரயில்வே பொது மேலாளரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.