கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய, அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், பெரியகருப்பன், மனோதங்கராஜ் ஆகியோர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசும்போது, “மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு நாளை செல்ல இருக்கிறேன். திமுகவுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், ஓட்டு போடாத மக்களுக்கும் சேவை செய்வதே என் கொள்கை.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பற்றி கவலைப்படுவதில்லை. மழைக்காலம் முடிந்த பின், எதிர்க்கட்சி செய்த அக்கிரமத்தை தனி ஆணையம் அமைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையிலான குழு ஆய்வு செய்து இன்று அல்லது நாளை அறிக்கை அளிப்பார்கள்” என்றார்.








