முக்கியச் செய்திகள் தமிழகம்

திருநங்கைகள் நலன் காக்கும் திமுக அரசு!


எல்.ரேணுகாதேவி

கட்டுரையாளர்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அரசு பேருந்துகளில், இலவச பயணச் சலுகையை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள பெரும்பான்மையான திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருநங்கைகள் மேல் அக்கறை கொண்ட அரசு

தங்களுடைய பாலின அடையாளத்தின் காரணமாக சமூக புறக்கணிப்புகளுக்கு ஆளாகி சொல்லொண்ணா கொடுமைகளைச் சந்தித்து வருபவர்கள் திருநர் சமூகத்தினர். பாலின மாறுபாடு காரணமாகப் பல மோசமான பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தவர்களை ‘திருநங்கைகள்’ என மரியாதையாக அழைக்கச் சட்டம் இயற்றியவர் கருணாநிதி.

அதேபோல் 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போதுதான் முதலமைச்சர் கருணாநிதியால் ‘தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம்’ அமைக்கப்பட்டது. இதன்காரணமாகவே திருநர் சமூக மக்களிடத்தில் கருணாநிதியின் மேல் அளவற்ற அன்பும், மரியாதையும் உருவானது.

பொதுச் சமூகத்திலிருந்து எழுந்த குரல்

பொதுவாக திருநங்கைகளுக்குத் தேவையான கோரிக்கைகள் பெரும்பாலும் அச்சமூகத்தின் சார்பில்தான் எப்போதும் முன்வைக்கப்படும். ஆனால் இம்முறை தமிழ்நாடு அரசு மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவித்தபோது திருநங்கைகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும் என்ற குரல் பொதுச் சமூகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சருக்குக் கவனப்படுத்தியவர் பத்திரிகையாளர் இந்துஜா. “பெண்களுடன் சேர்த்து திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயணத் திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும்” என இந்துஜா, முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து ட்விட் பதிவைப் போட்டிருந்தார்.

ஒரு பத்திரிகையாளரின் ட்விட்டர் பதிவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், ‘பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்’ பதில் ட்விட் செய்திருந்தார்.

திருநங்கைகள் நலன் காக்கும் அரசு

சமூக புறக்கணிப்பால் கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்படும் திருநங்கைகள் பிச்சை எடுத்தும், பல்வேறு தொழில் செய்தும் தங்களுடைய அன்றாட தேவைகளான பேருந்து பயணம், உணவு, உடை,வீட்டு வாடகை என அனைத்தையும் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பார்த்துக்கொள்ளவேண்டியதாக உள்ளது.

இந்த நேரத்தில் அரசின் இந்த அறிவிப்பை, திருநர் உரிமை கூட்டு இயக்கத்தின் நிறுவனர் கிரேஸ் பானு நியூஸ் 7 தமிழ் இணையப் பிரிவுக்கு அளித்த பேட்டியில் வரவேற்றுள்ளார். மேலும் அவர் கூறியதாவது,
“அரசு பேருந்துகளில் திருநங்கைகளுக்கு இலவச பயணம் சலுகையை அரசு அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுடைய தினசரி வாழ்க்கை பாட்டில் பேருந்து பயணம் இன்றியமையாதது. குறிப்பாக கிராமப்புறங்களில் ஊருக்கு ஒதுக்குபுறமாக வசித்துவரும் திருநங்கைகள் தங்களுடைய எல்லாத் தேவைக்கும் நகர் பகுதிகளுக்குத்தான் சென்றுவரவேண்டும். பேருந்து பயணத்திற்கு மட்டும் ஒரு மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் செலவாகிவிடும். தமிழ்நாடு அரசின் அறிவிப்பு திருநங்கைகள் மத்தியில் ஒரு சுமையை இறக்கிவைத்ததுபோல் உள்ளது. திருநங்கைகள் போல் திருநம்பியர்களுக்கு இந்த திட்டத்தை அரசு விரிவுபடுத்தவேண்டும். இதேபோல் திருநர் சமூகத்தில் உள்ளவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்கிறார் கிரேஸ் பானு.

சுதா மற்றும் கிரேஸ் பானு

“திருநங்கைகள் நலன் காக்கும் அரசாக எப்போதும் திமுக அரசு உள்ளது. மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தமிழகத்தில் திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்த பிறகுதான் மற்ற மாநிலங்களில் திருநங்கைகளுக்கான தனி நலவாரியம் அமைக்கப்பட்டது. அதேபோல்தான் தற்போதும் திருநங்கைகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணச் சலுகை திமுக அரசுதான் நாட்டிலேயே முதன் முறையாக அறிவித்துள்ளது. இதன்மூலம் எங்களால் மாதம் ஒரு தொகையைச் சேமிக்க முடியும் என்பது மட்டுமல்லாமல் மனசேர்வான நேரங்களில் ஒரு நீண்ட பயணம் செய்ய காசு இல்லையே என எண்ணத் தேவையில்லை” என்கிறார் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரிய உறுப்பினரான சுதா.

தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளி சங்கத்தினர் நன்றி

திமுக ஆட்சிக்கு வந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அறிவிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது இந்த வாக்குறுதி ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்தில் இலவச பயண சலுகை அறிவிக்கவேண்டும் என்பது 10 ஆண்டுக்கால கோரிக்கையாகும். இந்த நீண்டநாள் கோரிக்கையைத் தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. அரசின் இந்த முயற்சி மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மற்ற தென்மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை ரூபாய் ஆயிரத்திலிருந்து உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வலியுறுத்தினார்.

Advertisement:

Related posts

உலக சுகாதார நிறுவனம் கவலை!

Vandhana

தமிழகத்தில் அதிக வாக்கு, குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் யார்?

தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த விவேக்கின் மகள்!

Karthick