சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையிலும் கன மழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தண்ணீர் வடிந்து நிலைமை சரியான நிலையில், கடந்த 2 நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பார்வையிட்டு ஆய்வு செய்தார். தியாகராய நகர், விஜய ராகவா சாலை, ஜி.என். சாலை, பசுல்லா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டும் மழையில் சென்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக சென்னை புளியந்தோப்பு, பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.