’உங்களோடு நானும் களத்தில் நிற்கிறேன்…’: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நன்றி

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப் பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் களத்தில் இருந்து பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மழை…

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப் பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் களத்தில் இருந்து பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று  ஆய்வு செய்தார். தியாகராய நகர், விஜய ராகவா சாலை, ஜி.என். சாலை, பசுல்லா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டும் மழையில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில், ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இது நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வு உறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது!

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்!

இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.