தமிழகத்தில் கொரோனாவை முற்றிலும் ஒழித்துவிட்டோம் என்ற நிலையை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக நடைபெற்றது.
தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் நோக்கத்தை, மாவட்ட ஆட்சியர்கள் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும், கொரோனாவை முற்றிலும் ஒழித்துவிட்டோம், என தலைநிமிர்ந்து கூறும் நிலையை, மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்த வேண்டும், என்றும் கேட்டுக்கொண்டார்.







