மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஓட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஓட்டம் என்றும் மொழி அழிந்தால் இனம் அழியும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  சென்னை பாரிமுனையில் தமிழ் இசை சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ் இசை 80-ம் ஆண்டு…

மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஓட்டம் என்றும் மொழி அழிந்தால் இனம் அழியும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை பாரிமுனையில் தமிழ் இசை சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ் இசை 80-ம் ஆண்டு விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவின்போது, பாடகி செளமியாவுக்கு இசை பேரறிஞர் விருதும், சற்குருநாதன் ஓதுவாருக்கு பண் இசை பேரறிஞர் விருதும் வழங்கி கௌரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனித்தமிழ் இயக்கத்தையும் தமிழ் இசை இயக்கத்தையும் திராவிட இயக்கம் ஆதரித்ததாக தெரிவித்தார்.

பல நூற்றாண்டுகளாக தமிழ் நிலப்பரப்பு பல்வேறு பண்பாட்டு படையெடுப்புகளுக்கு ஆளானது எனக் கூறிய அவர், அந்நியர் ஆக்கிரமிப்பால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.  அந்நியர் இன படையெடுப்பால், தமிழ் இனம் அதன் உரிமையை இழந்தது, அந்நிய மொழிக்காரர்களின் உடுருவலால் தமிழ் புறக்கணிக்கப்பட்டது என்றும் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ஆதிக்க வர்கத்தினரால், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த சூழலில் தமிழகத்தின் உரிமையை காக்க திராவிட இயக்கம் எழுந்தது, தமிழ் மொழியை காக்க மறைமலை அடிகள் தலைமையில் தனி தமிழ் இயக்கம் எழுந்தது, தமிழ் கலையை காக்க இந்த தமிழ் இசை சங்கம் எழுந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.  எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆள வேண்டும் எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.