வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசியன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது.
வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி திருப்பதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதிசியொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டு 11ம் தேதி வரை 10 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.







