புதிய யுக்திகள் எங்கிருந்தாலும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்: முதலமைச்சர்

புதிய யுக்திகள் எங்கிருந்தாலும், மக்களுக்குப் பயனளிக்கும் என்றால், அதை நம் மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தலைமைச் செயலகத்தில் துறைச் செயலாளர்களுடனான இரண்டாம் நாள் ஆய்வுக் கூட்டம்…

புதிய யுக்திகள் எங்கிருந்தாலும், மக்களுக்குப் பயனளிக்கும் என்றால், அதை நம் மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தலைமைச் செயலகத்தில் துறைச் செயலாளர்களுடனான இரண்டாம் நாள் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சில துறைகளில் இன்னும் அரசாணைகள் வெளியிடுவதில் தாமதம் காணப்படுகிறது. அதற்கான காரணங்களை நீங்கள் இங்கே தெரிவித்திருக்கிறீர்கள். அதையும் களைந்து விரைவான, தேவையான அனைத்து ஆணைகளும் நீங்கள் வெளியிட வேண்டும். இதில் நீங்கள் நேரடியாக கவனத்தை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொழில் துறையின் மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நாம் முன்னெடுத்திருக்கிறோம் என்றும், அது விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வந்து, படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புகளை நாம் பெருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்திய முதலமைச்சர், தனது கனவுத் திட்டமான நான் முதல்வனை விரிவுபடுத்தி, இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், “புதிய தொழில்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும். அதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால், அதை நீக்குவதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும். மருத்துவ சேவைகளை மேம்படுத்தி வழங்கி, மருத்துவமனை நிர்வாகத்தினை மக்கள் மேலும் விரும்பும் வகையில், People friendly-ஆக இருக்க வேண்டும்.

வேளாண் துறையைப் பொறுத்தவரையில், உழவர் சந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதிலும், புதிய பயிர் வகைகளை அறிமுகப்படுத்துவதிலும், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய Agricultural Marketing அந்தத் துறையை பலப்படுத்திடவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்களை பெருமளவில் அமைக்கவும் வேண்டும் என்று இதன்மூலம் மட்டுமே, விவசாயிகளின் வருமானத்தை நாம் அதிகரிக்க முடியும். ஆகவே, இதில் இத்துறை கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக மக்கள் இந்த அரசின் மீது வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு துறையும் செயலாற்ற வேண்டும். புதிய யுக்திகளை, அவை எங்கிருந்தாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் என்றால், அதை நம் மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அப்படி நீங்கள் செய்தால், உங்களை ஊக்குவிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது” என்று உரையாற்றி முடித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.