பாஜகவில் இணைந்தார் ஹர்திக் படேல்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல், பாஜகவில் இணைந்தார் குஜராத்தின் படேல் சமூக இளம் தலைவராக அறியப்படும் ஹர்திக் படேல், கடந்த 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தி முன்னிலையில்…

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல், பாஜகவில் இணைந்தார்

குஜராத்தின் படேல் சமூக இளம் தலைவராக அறியப்படும் ஹர்திக் படேல், கடந்த 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதையடுத்து அவருக்கு குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த ஹர்திக் படேல், கடந்த மாதம் 19ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகினார்.

குஜராத்தில் உள்ள முன்னணி காங்கிரஸ் தலைவர்களிடம் கட்சியை வளர்க்கும் திட்டம் ஏதும் இல்லை என கடுமையாகக் குற்றம் சாட்டிய ஹர்திக் படேல், டெல்லியில் இருந்து வரும் காங்கிரஸ் தலைவர்களுக்கு சிக்கன் பகோடா போன்ற சுவையான உணவுப் பொருட்களை நேரத்திற்கு வாங்கிக் கொடுப்பது மட்டும்தான் அவர்கள் செய்யும் முக்கிய கட்சிப் பணி என விமர்சித்தார்.

இதையடுத்து அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், குஜராத் பாஜக தலைவர் சி.ஆர். பாட்டில் முன்னிலையில் ஹர்திக் படேல் பாஜகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று புதிய அத்தியாயத்தை தான் தொடங்கி இருப்பதாகவும், கட்சியின் போர் வீரர்களில் ஒருவனாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.

கட்சியில் எந்த பொறுப்பையும் தான் கேட்கவில்லை என தெரிவித்த ஹர்திக் படேல், எந்த எதிர்பார்ப்பும் தனக்கு இல்லை என கூறினார்.

உலகின் பெருமிதமாக நரேந்திர மோடி திகழ்வதாகக் குறிப்பிட்ட ஹர்திக் படேல், மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் ஏழை எளிய மக்களை சென்றடைய ஒரு கருவியாக இருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.