ரஷ்யாவில் முடிவுக்கு வந்த ஆயுதக் கிளா்ச்சி – பெலாரஸில் தஞ்சம் அடைந்த வாக்னர் படைத் தலைவர்

ரஷ்ய ராணுவ தலைவருக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியை தொடங்கிய வாக்னர் படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ், அதிபர் விளாடிமிர் புதினின் மிரட்டலுக்கு பணிந்து ரஷ்ய அரசுடன் சமரசம் செய்துகொண்ட நிலையில், அவர் அந்த நாட்டைவிட்டு…

ரஷ்ய ராணுவ தலைவருக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியை தொடங்கிய வாக்னர் படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ், அதிபர் விளாடிமிர் புதினின் மிரட்டலுக்கு பணிந்து ரஷ்ய அரசுடன் சமரசம் செய்துகொண்ட நிலையில், அவர் அந்த நாட்டைவிட்டு வெளியேறி பெலாரஸில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோவியத் யூனியனில் திருட்டு மற்றும் மோசடி வழக்கில் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவா் யெவ்கெனி ப்ரிகோஷின். சோவியத் யூனியன் சிதறிய பிறகு, ரஷியாவின் தனியாா் துணை ராணுவப் படையான வாக்னா் குழுவின் தலைவரானாா். ரஷ்ய அதிபா் புதினுடன் யெவ்ஜெனி பிரிகோஸ்க்கு நீண்டகாலமாக உறவு உள்ளது. இந்நிலையில், உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து வாக்னா் குழு முக்கியப் பங்காற்றியது. குறிப்பாக அந்நாட்டின் பாக்முத் நகரைக் கைப்பற்றியது. எனினும் ரஷ்ய ராணுவத்தின் திறமையின்மை, ரஷிய பாதுகாப்புத் துறை சாா்பில் வாக்னா் குழுவுக்கு போதிய வெடிபொருள்கள் வழங்கப்படாததை ப்ரிகோஷின் விமா்சித்து வந்தாா். இந்தச் சூழலில், போரின்போது, வாக்னர் தலைவர் ஈவ்ஜெனி பிரிகோஸினுக்கும், ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கே ஷோய்கு, தளபதி வாலரி ஜெரசிமோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனையடுத்து உக்ரைன் போருக்கான தலைமையிடமாக விளங்கிய ரஷ்யாவின் ரோஸ்டோவ் நகரில் செயல்பட்ட ரஷ்ய ராணுவக் கட்டுப்பாட்டு மையத்தை வாக்னர் ஆயுதக் குழு நேற்று முன்தினம் கைப்பற்றியது. அப்போது ‘ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷோய்கு மற்றும் ராணுவ தளபதி வாலரி ஜெரசிமோவ் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும். எங்களது வீரர்கள் இங்கிருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கி செல்வார்கள். குறுக்கே யார் வந்தாலும் அவர்களை அழித்துவிடுவோம் என பிரிகோஸ் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, வாக்னர் படை வீரர்கள் தலைநகர் மாஸ்கோவிலிருந்து சுமார் 200 கி.மீ. தூரம் வரை முன்னேறி சென்றதாக தகவல் வெளியானதை அடுத்து மாஸ்கோவில் அதிபர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையாற்றிய அதிபர் விளாடிமிர் புதின் , ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், அவர்களின் பாதுகாப்பு, இறையாண்மைக்காகவும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த தருணத்தில், நமது ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இது ‘மிகப்பெரிய துரோகம்’. கிளர்ச்சியாளர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். இதன் பின்னர் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் உருவானது.

இந்நிலையில், பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய அரசு மற்றும் பிரிகோஸின் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு ரஷ்ய அரசுக்கும் வாக்னர் தலைவர் பிரிகோஸினுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டு திடீர் புரட்சி உடனடியாக முடிவுக்கு வந்துவிட்டது. அதன்படி, வாக்னர் படைத்தலைவர் பிரிகோஷின் தனது குழுவுடன் ரஷ்யாவில் இருந்து வெளியேறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் வாக்னர் படையுடனான சமரசத்தினால் ரஷ்யாவில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய தலைமைக்கு ஏற்பட்ட பிரச்சனை முழுமையாக நீங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரிகோஸின் ரஷ்யாவை விட்டு வெளியேறி பெலாரஸில் தஞ்சமடைந்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக பிரிகோஸின் மீதும் அவருடைய படையினர் மீதும் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் ரஷ்யாவுக்கு இதுவரை செய்த சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், கிளர்ச்சியில் ஈடுபடாத வாக்னர் குழு வீரர்கள் ரஷ்ய ராணுவத்தில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் முறைப்படி சேர்த்துக்கொள்ளப்படுவர் என்றும் ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.