குழந்தையை கடத்த வந்தவர் என வடமாநில இளைஞரை தாக்கிய பொதுமக்கள்… வதந்திகளை நம்ப வேண்டாம் என போலீசார் அறிவிப்பு!

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் குழந்தை கடத்த வந்த நபர் என நினைத்த பொதுமக்கள்,  வடமாநில இளைஞரை தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  சென்னை சேத்துப்பட்டு பகுதியில்,  பச்சையப்பன் கல்லூரியின் பின்புறம் உள்ள சாலையில் நேற்று…

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் குழந்தை கடத்த வந்த நபர் என நினைத்த பொதுமக்கள்,  வடமாநில இளைஞரை தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

சென்னை சேத்துப்பட்டு பகுதியில்,  பச்சையப்பன் கல்லூரியின் பின்புறம் உள்ள சாலையில் நேற்று மாலை குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தபோது,  அந்த வழியாக வந்த வட மாநில இளைஞர் ஒருவர் குழந்தைக்கு இனிப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து குழந்தைகள் அவரை கண்டு அச்சப்பட்டு கூச்சலிட்டதாகவும் அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.  இந்த நிலையில்,  அந்த இளைஞர் மொழி புரியததால் எதுவும் சொல்லாமல் இருக்க,  குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து பொதுமக்கள் அவரை தாக்கியுள்ளனர்.

பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சேத்துபட்டு போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசித்து வரும் அந்த இளைஞர் குடிபோதையில் வழித் தவறி வேறு பகுதிக்குச் சென்று விட்டதாக கூறியுள்ளார்.  இந்த சம்பவம் குறித்து சேத்துபட்டு போலீசார் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வளைதளங்கள் மூலமாக பரப்பப்படும் வதந்திகளை நம்பி ஆங்காங்கே வடமாநில இளைஞர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து, நடைபெற்று வரும் நிலையில்,  இதுபோன்ற தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.