சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஆகியோர் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவ செய்துள்ளனர்.
1961ஆம் ஆண்டு கொரியப் போருக்குப் பிறகு சீனாவும், வடகொரியாவும் நட்பு நாடாகளாயின. அதன் 60 ஆண்டு தினத்தை குறிக்கும் வகையில் இரு நாடுகளும் தங்கள் உறவுகளை புதிய கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உறுதியேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு உலக நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், வர்த்தகத்திற்கு சீனாவை மட்டுமே அந்நாடு நம்பியுள்ளது. அதேபோன்று, சீனாவும் அமெரிக்காவும் எதிரெதிர் துருவங்களாக உள்ள நிலையில், வடகொரியாவுடன் அந்நாடு நட்பு பாராட்டி வருகிறது.
2018ல் இருந்து இருநாட்டு தலைவர்களும், இதுவரை 5 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, வடகொரிய அதிபர் கிம் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த சில ஆண்டுகளாக உலகில் அசாதாரணமாக சூழல் நிலவி வந்தபோதிலும், சீனா தங்களது உற்ற நண்பனாக விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார் என கூறப்படுகிறது. அதேபோல், ஆசிய கண்டத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநிறுத்த, இருநாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம், எனவும் கிம் குறிப்பிட்டுள்ளதாக, வடகொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீன மற்றும் வடகொரிய மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த விரும்புவதாகவும், இருநாட்டு உறவையும் புதிய தளத்திற்கு கொண்டு செல்லவும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







