பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் மாக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு இந்தியா முன்வைத்த கோரிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை போட்டது.
அப்துல் ரகுமான் மாக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267-ஆவது குழுவின் கீழ் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு ஐ.நா.வில் இம்மாதம் 1-ம் தேதி இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக கோரிக்கை முன்வைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல்காய்தா, ஐஎஸ்ஐஎல் தடைக் குழுதான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 1267ஆவது குழு என்றழைக்கப்படுகிறது.
இந்தியாவும், அமெரிக்காவும் தங்கள் உள்நாட்டுச் சட்டங்களின்படி, அப்துல் ரகுமான் மாக்கியை பயங்கரவாதியாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இரு நாடுகளும் முன்வைத்த கோரிக்கை, 1267 ஆவது குழுவில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கு தடையில்லை என்ற அனுமதியைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்டது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
லஷ்கர்-ஏ-தொய்பாவின் அரசியல் விவகாரங்கள் பிரிவு தலைவராகவும் மாக்கி உள்ளார். அந்த அமைப்பின் வெளியுறவு துறையின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்திருக்கிறார்.
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்காக இளைஞர்களை மூளைச் சலவை செய்தல், நிதிகளை திரட்டுதல் ஆகியவற்றை மாக்கி செய்து வந்தார். குறிப்பாக, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு அவர் சதித்திட்டம் தீட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
2008ம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதல், 2000ஆவது ஆண்டில் செங்கோட்டையில் தாக்குதல், 2008ஆம் ஆண்டில் ராம்பூர் சிஆர்பிஎஃப் முகாமில் தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களுக்கு அப்துல் மாக்கி பின்னணியில் செயல்பட்டதை இந்தியா கண்டறிந்தது.
கடந்த 2019ம் ஆண்டு மே 15ம் தேதி மாக்கியை பாகிஸ்தான் அரசு கைது செய்ததாகவும், லாகூரில் வீட்டுக் காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய குற்றத்திற்காக 2020ம் ஆண்டு மாக்கியை குற்றவாளியாக அறிவித்த பாகிஸ்தான் நீதிமன்றம், அவருக்கு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
-மணிகண்டன்