பொதுமக்களுக்கு வழங்கும் பொதுவிநியோகத்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ வீதம் கேழ்வரகு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொதுவிநியோகத்திட்டம் இந்தியாவில் 1960-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் இதன் மூலம் கோதுமை, அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், பொதுவிநியோகத்திட்டத்தில் தற்போது கேழ்வரகு கொடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிறந்த ஆரோக்கிய உணவாக கருதப்படும் கேழ்வரகு, நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் பிரதான உணவாக உள்ளது.
இந்நிலையில், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் உணவு பழக்கவழக்கங்களும் பாதுகாக்கப்படும் வகையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக ஒரு குடும்பத்திற்கு மாதம் 2 கிலோ வீதம் கேழ்வரகு விநியோகிக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்








