குழந்தைகள் தினம் : உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, மகிழ்ச்சியின் வடிவமாக வலம் வரும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும் என் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தூய அன்பையும் – தன்னிகரில்லா கனவுகளையும் சுமந்து நிற்கும் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க என்றைக்கும் துணை நிற்போம்.

ஒவ்வொரு குழந்தையும் அறிவின் துணையோடு வாழ்வில் வென்று சமூகத்தை உயர்த்த என் அன்பும் – வாழ்த்தும்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “வண்ணக் கனவுகளோடு சிறகடிக்கும் நம் செல்லக் குழந்தைகள், ஒவ்வொரு துறையிலும் புதிய சிகரங்களைத் தொடட்டும்.
அன்பும், நல்ல வழிகாட்டுதலும் கொடுத்து அவர்களின் பாதையை அழகாக்குவோம்.

​என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி கனி மொழி வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், “கனவுகளுடன் இந்த உலகை எதிர்நோக்கும் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பாதுகாத்து, அவர்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வளர்வதற்கான சூழலை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “அன்பின் மொழியால், மலரும் புன்னகையால் உலகை அழகாக்கும் குழந்தைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வறுமை, பாகுபாடு, குழந்தைத் தொழிலாளர் முறை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அச்சுறுத்தல்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தரமான கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் முழுச் சுதந்திரம் கிடைப்பதை உறுதிசெய்ய இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.