செஞ்சியில் காணாமல்போன சிறுமியின் குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல்…! தவெக அரசுக்கு சரமாரி கேள்வி!

செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் குடும்பத்தினரை கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வடிவேல் மற்றும் பவானி. இவர்களது மகள் ஹேமலதா (வயது 7). கடந்த மாதம் 12ஆம் தேதி அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த ஹேமலதா திடீரென காணாமல் போனார். இதையடுத்து, சிறுமியைக் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து, காவல்துறையினர் தீவிரமாகத் தேடியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிறுமி காணாமல் போய் 34 நாட்கள் கடந்தும் எந்தவொரு தடயமோ, ஆதாரமோ கிடைக்கவில்லை.

இந்நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி காணாமல் போன சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, சிறுமி காணாமல் போய் கிட்டத்தட்ட 35 நாட்கள் ஆகிறது. ஆனால், அந்த குழந்தையை கண்டுபிடிப்பதற்கு இந்த அரசாங்கம் உண்மையாகவே இதுவரை எதையும் செய்ததாக தெரியவில்லை.

குழந்தை காணோம் என தெரிந்தவுடனே காவல்துறையில் புகார் கொடுத்து இருக்கிறார்கள். அங்க இருக்கக்கூடிய அதிகாரிகளும் குழந்தை காணவில்லை என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் 2013 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி (Kailash Satyarthi) தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஒரு குழந்தை காணாமல் போனாலே அந்த குழந்தையை காணவில்லை என்ற அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு பண்ணக்கூடாது என தெளிவாக கூறியுள்ளது . அதிலும் குழந்தை காணாமல் போன 24 மணி நேரத்திற்குள் அந்த கடத்தல் வழக்காக பதிவு செய்யப்படவேண்டும். ஆனால் ஏன் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள் என தெரியவில்லை

தவெக அரசு எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறது

இந்த விவகாரத்தில் தவெக அரசு இதை பத்தி எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறது. குழந்தைகள் நல ஆணையம், காவல்துறை இரண்டுமே முதலமைச்சர் விஜய் அவர்களுடைய நேரடியிலே பார்வையிலே இருக்கக்கூடிய துறைகள். அவருக்கு கீழே வரக்கூடிய துறைகள் கூட செயல்பட்டு இன்றி இருப்பது வெட்கக்கேடானது.

தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் காலங்களில் குழந்தைகளை பார்த்துதான் நண்பா, நண்பி என அழைத்து வீட்டில் உள்ளவர்களை வாக்களிக்க வைக்க வேண்டும் என வேண்டினார். குழந்தைங்களால் கிடைத்த வாக்கை வாங்கி, சொல்லப்போனால் குழந்தைகளை வீட்டில் அடம் பிடிக்க சொல்லிதான் வாக்கை வாங்கி இந்த பதவியில உட்கார்ந்திருக்கிறார்.

கேக் ஊட்டிவிடும் முதல்வர்.. ஆறுதல் கூறவில்லை

நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு கேக் ஊட்டிவிடும் முதலமைச்சர் ஏன் இந்த வீட்டுக்கு வந்து குழந்தையின் பெற்றோர்களுக்கு ஒரு வார்த்தை ஆறுதல் சொல்லவில்லை. கண்டிப்பாக, அந்த குழந்தையை கண்டுபிடித்து தருவோம் என சொல்ல அவர் வரவிட்டாலும், இங்க இருக்கக்கூடிய பொறுப்பு அமைச்சராவது வந்து இந்த குடும்பத்தில் யாரையாவது அழைத்து ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லி இருக்கலாம்.

மாறாக இந்த மாவட்டத்தின் தவெக செயலாளர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் திளைத்து கொண்டிருக்கிறார். நாங்கள் வரக்கூடிய வழியில் அவரது பிறந்தநாள் பேனரும் கொடிகளும் கட்டுப்பட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வழி நெடுகிலும் காணமுடிந்தது. ஆனால் இந்த குழந்தையை கண்டுபிடிப்பதற்கு எந்த வித சரியான முயற்சியும் அவர்கள் முன்னெடுக்கவில்லை.

அந்த குழந்தை காணாம போய் 35 நாள் ஆகிறது. ஆனால் எந்தவித சரியான நடவடிக்கையும் இல்லை. பெற்றோர்களுக்கு எந்த விதமாகவும் அவர்கள் ஆறுதல் கூட சொல்லவில்லை. இந்த குழந்தை கிடைக்குமா, எங்க இருக்கு, என்ன என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்காதநிலையில், அவர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையிலே எதுவுமே இல்லை.

மிகப்பெரிய அவலம் நடந்திருக்கிறது

இங்கு மட்டும் இல்லை. இவங்க ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் எத்தனையோ குழந்தைகள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கிறது. கடலூரில் மட்டும் ஒரே நாளில் கிட்டத்தட்ட எத்தனையோ குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பத்தினர் என பலர் காணாமல் போயிருக்கக்கூடிய மிகப்பெரிய அவலம் நடந்திருக்கிறது. ஒரு குழந்தை காணவில்லை, ஒரு தாய் காணவில்லை.

இத்தனை பெரிய சம்பவத்திற்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால், இதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குச் சென்று ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லக்கூட இந்த ஆட்சியில் இருப்பவர்களுக்கு தைரியம் இல்லாத நிலைதான் இருக்கிறது.

முதலமைச்சருக்கே பாதுகாப்பில்லை

ஏன் என்றால், முதலமைச்சரே தன்னுடைய பாதுகாப்பைப் பற்றி அச்சப்படக்கூடிய அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது. நேற்றுகூட கொளத்தூருக்குச் சென்றபோது, ரசிகர் ஒருவர் வந்ததைத் பார்த்து பதறி ஓடுகிறார் முதலமைச்சர். ஏனெனில் பாதுகாப்பு குறித்து அவரே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. உண்மையில் மக்களின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட வேண்டிய ஆட்சியே, தன்னுடைய பாதுகாப்பைப் பற்றி பயப்படும் நிலையில் இருக்கிறது . அப்படிப்பட்ட ஆட்சியைதான் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு அலங்கோலமான ஆட்சியில் யாரை கேட்டு ஆட்சி பொறுப்புக்கு வந்தாங்களோ, அந்த குழந்தைகளுக்கு கூட ஒரு பாதுகாப்பு தர முடியாத ஒரு தரம் இல்லாத ஒரு ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் ஒரு முதலமைச்சர் அவருடைய நேரடி துறைகளில் தவறுகள் நடக்கும் போது கூட வாயை திறக்க மாட்டேன் என மெளனம் சாதிக்கிறார். இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரை இதுவரைக்கும் தமிழ்நாடு பார்த்ததே கிடையாது.

திமுகவே ஆட்சியில் இருக்கலாமே

திமுக கூறியபின்னர் அதை இந்த அரசு செய்யுமானால், அதற்கு நேரடியாக திமுகவே ஆட்சியில் இருக்கலாமே என்று கேட்கும் அளவுக்கு இன்றைய ஆட்சியின் செயல்பாடுகள் இருக்கின்றன. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியது பெண்கள், குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதுடன், ஆளுங்கட்சியினருக்கே தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.

இந்த அரசு குற்றங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தாமல், கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு இந்த ஆண்டு குற்றங்கள் குறைந்திருக்கின்றன, அதிகரித்திருக்கின்றன என்று புள்ளிவிவரங்களைக் காட்டி நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஆறு குற்றங்கள் நடைபெற்றிருந்தால், அதற்கு முந்தைய ஆண்டு பதினொரு குற்றங்கள் நடைபெற்றன என்று கூறி தங்களது ஆட்சியை நியாயப்படுத்துவது என்ன விதமான அணுகுமுறை என தெரியவில்லை. குற்றங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பேசுவதிலேயே இவர்களின் ஆட்சியின் நிலை வெளிப்படுகிறது.

மனசாட்சிக்கு உண்மையாகச் செயல்பட வேண்டும்

திமுக சார்பில் நாங்கள் போராட்டங்களை நடத்த முடியும். எங்கள் தலைவர் தொடர்ந்து குரல் கொடுக்க முடியும். சட்டமன்றம் நடைபெறும்போது அங்கும் இதுகுறித்து கேள்வி எழுப்ப முடியும். ஆனால், ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் தங்களுடைய மனசாட்சிக்கு உண்மையாகச் செயல்பட்டு, இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்குக் காவல்துறையைப் பயன்படுத்த வேண்டும். அதைச் செய்யாமல், தங்களுடைய பாதுகாப்புக்கும் சொந்த அரசியல் நலன்களுக்கும் மட்டுமே அரசாங்கத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களால் குற்றங்களை தடுக்க முடியாவிட்டால், குற்றம் நடந்த பிறகாவது குற்றவாளிகளைக் கண்டறிந்து, காணாமல் போன குழந்தைகளையும் பெண்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் மக்களுக்கே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். முதலமைச்சருக்கே தனது ஆட்சியில் தனக்குப் பாதுகாப்பு இருக்குமா என்ற நம்பிக்கை இல்லாத நிலைதான் இன்று ஏற்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய கேக்கில் முதலமைச்சர் All is Well என்று எழுதிய அட்டையுடன் கேக் கொடுத்து வாழ்த்து தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இதைவிட சிறந்த முரண்நகை வேறு எதுவும் இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.