மதுரை சக்கிமங்கலம் கண்மாயில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பகுதியில் உள்ள சௌராஷ்டிரா காலனியைச் சேர்ந்த 5 சிறுவர்கள் அருகில் உள்ள சக்கிமங்கலம் கண்மாயில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆதிசேஷன்(14), ஹேமந்த்(10) என்ற இரண்டு சிறுவர்களும் கண்மாயில் உள்ள ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சகதியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர்.
இதைப் பார்த்த மற்ற சிறுவர்கள், பெரியர்வகளை அழைத்து வந்து இருவரையும் மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு சிறுவர்களையும் பரிசோதனை செய்த மருத்துவர், அவர்கள் இறந்ததை உறுதி செய்தார். இந்த சம்பவம் குறித்து சிலைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்மாய் பகுதியை வேலிகொண்டு அடைக்காததால் சிறுவர்கள் கண்மாயில் சிக்கி உயிரிழக்கும் சூழல் உள்ளதாகவும், விரைந்து கண்மாயைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







