தாய், தந்தை இல்லாமல் தாத்தா பாட்டி அரவணைப்பில் வளரும் இரண்டு சிறுவர்களுக்கு கல்வி மற்றும் அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கம்பூரை சேர்ந்த வயதான தம்பதிகள் வீரணன், அழகு. அவர்களது உறவினர் பெண்ணான சுகன்யா என்பவரை சிறுவயது முதலே வளர்த்து வந்துள்ளனர். சுகன்யா லாரி ஓட்டுநரான பக்கத்து ஊரை சேர்ந்த முருகன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சுகன்யாவின் கணவர் முருகன் கேன்சர் நோயால் உயிரிழந்துள்ளார். கணவர் உயிரிழந்ததால் சுகன்யா தனது இரு மகன்களான முகிலன்(9) மகேஸ்வரன் (7) ஆகிய இருவரையும் கம்பூரில் உள்ள வயதான முதியவர்களின் வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இந்த சூழலில் இரு சிறுவர்களுக்கும் ஆதார், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பள்ளி சேர்க்க முடியவில்லை.
சிறு பிள்ளைகளான அவர்களை, வயதான தம்பதியினரால் பராமரிக்க முடியாமல் கஷ்டபடுவதால், இந்த இரு சிறுவர்களையும் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்து அவர்களுக்கான கல்வி வசதியை ஏற்படுத்தி தர வேண்டுமென என வயதான தம்பதியினரும், சிறுவர்களின் அத்தையான சபரிலெட்சுமியும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.