“குழந்தைகள் அரசியல் ஆயுதங்கள் அல்ல” – உதயநிதிக்கு கனிமொழி சந்தோஷ் கண்டனம்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதற்கு தவெக எம்.எல்.ஏ கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குழந்தையை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சிறுவனைப் பயன்படுத்தியதற்கு தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

“பச்சிளம் குழந்தைகளை அரசியல் லாபத்திற்காக பகடைக்காயாக்குவதா? தேர்தல் பிரசாரத்தில் சிறுவனைப் பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செயலுக்கு எனது கடும் கண்டனம்!

தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதற்காக பச்சிளம் குழந்தைகளையும் சிறுவர்களையும் அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது சிறுவன் ஒருவரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தி, அரசியல் கருத்துகளைப் பேச வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறைகள் தெளிவாக இருக்கும் நிலையில், இச்சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது.

குழந்தைகள் அரசியல் ஆயுதங்கள் அல்ல; அவர்களின் பிஞ்சு மனதை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு அரசியல்வாதியின் உண்மையான கடமை குழந்தைகள் கையில் புத்தகத்தைக் கொடுப்பதே” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.