முக்கியச் செய்திகள் தமிழகம்

தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு இடையே உள்ள ஒற்றுமைகள்

தமிழ்நாடு அரசின் இரு முக்கிய தலைமை பதவிகளை அலங்கரிக்கும் இறையன்பு ஐஏஎஸ், டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரிடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன.


தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போதே, தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத் தலைவர் பொறுப்புக்கு மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம் செய்யப்பட்டார். தற்போது, காவல்துறையின் தலைமை இயக்குநராக தமிழரான சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அரசின் இருபெரும் பதவிகளில் அமர்ந்திருக்கும் இருவருமே தமிழர்கள் என்பது மட்டுமன்றி, இருவருமே வேளாண் கல்வியை விருப்ப பாடமாக எடுத்து படித்து, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக பணியில் அமர்ந்தவர்கள் என்பது, வேளாண் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புது உத்வேகத்தை பாய்ச்சியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, நேர்மை, உழைப்பு, நேர்த்தியான நிர்வாகம் என பல்துறை திறமைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டிஜிபி சைலேந்திர பாபு, மன உறுதியும் திறம்பட செயலாற்றும் தன்மையுடன் மத்திய அரசுப் பணியாளர் தேர்வெழுதி ஐ.பி.எஸ் அதிகாரியாக முதன் முதலில் பணியில் சேர்ந்தார்.

விவசாயம், உளவியல், இலக்கியம் என பல துறைகளில் பட்டம் பெற்ற இறையன்பு, சுய முன்னேற்ற பேச்சால் எண்ணற்ற கிராமப்புற மாணவர்களை இன்றளவும் ஊக்குவித்து வருகிறார். கல்வியே மாணவர்களின் பலம் என ஒவ்வொரு மேடையிலும் முழங்குவதுடன், தன்னால் முடிந்த உதவிகளை மாணவர்களுக்கு செய்வது என மாணவர்களின் நம்பிக்கை நாயகனாக வலம் வருகிறார் சைலேந்திர பாபு.

ஐஏஎஸ் தேர்வும் அணுகுமுறையும், போர்த் தொழில் பழகு, ஏழாவது அறிவு என நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிய இறையன்புவும், உடலினை உறுதி செய், சாதிக்க ஆசைப்படு என 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய சைலேந்திர பாபுவும்… மாணவர்கள் இளைஞர்களின் விருப்பத் தேர்வுகளில் ஒன்றாக உள்ளனர்.

இறையன்பு ஆட்சியராக இருந்த போது, சிறைக்கைதிகளுக்கு தொழில் திறன்களை வளர்க்கும் பயிற்சி அளித்தார். சைலேந்திர பாபுவோ, சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த போது, கைதிகளின் மறுவாழ்வுக்காக எண்ணற்ற புதிய திட்டங்களை கொண்டுவந்தார்..

சுற்றுலாத்துறை, வனத்துறை, சுற்றுசூழல், புள்ளியியல் என பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இறையன்பு, தான் மேற்கொண்ட செயல் திட்டங்களால் எளிய மக்களின் நம்பிக்கையை பெற்றவராக வலம் வருகிறார். ஏ.எஸ்.பியாக பணியைத் தொடங்கி சிறப்பு அதிரடிப்படைத் தலைவர், காவல்துறை ஆணையர், கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி, ரயில்வே டி.ஜி.பி எனப் பல பதவிகளை அலங்கரித்த சைலேந்திர பாபு, உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு என விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூக ஊடகத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவராக இருக்கிறார்…

எந்த துறைக்கு மாற்றப்பட்டாலும் அதில் புதுமையை புகுத்தும் இறையன்பு ஐஏஎஸும், எந்த துறையிலும் தனது அடையாளத்தை பதிவு செய்யும் டிஜிபி சைலேந்திர பாபுவும், தமிழகத்தின் இருபெரும் தலைமைப் பதவியில் அமர்ந்திருப்பது ஒரு நல்ல தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

”2021-ல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம்”- அண்ணாமலை!

Jayapriya

ஹசிம் அம்லா, விராட் கோலியை முந்திய பாகிஸ்தான் கேப்டன்

Ezhilarasan

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

Halley Karthik