எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணி டைடல் பார்க் கூட்ட அரங்கில் மேம்பட்ட உற்பத்தி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அதுபோலவே, டைடல் பார்க்கில் ரூ. 212 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூர் சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரூ 33.46 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில் புத்தாக்க மையங்களை திறந்துவைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் மேம்பாட்டிற்கான கலங்கரை விளக்கம் முதலமைச்சர். பழமைக்கும், புதுமைக்கும் இணைப்புப் பாலமாக தமிழ்நாடு இருக்கும். திறன் வாய்ந்த மனிதவளம் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் உள்ளது என்றார்.
இறுதியாக உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தொழில்துறை சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணமான அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிகாரிகளை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்.
இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு எனவும், 2030ம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்டதாக்க வேண்டும் என்றும் நிகழ்வில் வலியுறுத்திய முதலமைச்சர், அறிவு சார் நகரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.
அறிவுசார் ஆராய்ச்சிப் பூங்கா பாரதியார் பல்கலையில் தொடங்கப்படவுள்ளதாகவும், உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்து தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும், மேம்பட்ட உற்பத்தியில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்