தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதில் முதலைமைச்சர் உறுதியாக இருப்பது வரவேற்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகர்சாமியின் 13-ஆம் ஆண்டு நினைவு நாள் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாகவும், எதிர்க்கட்சி தொடர்ந்து பலவீனம் அடைந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது எனவும் முத்தரசன் கூறினார். கோகுல் ராஜ் கொலை வழக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ஆணவக்கொலை என்பது இந்த நாகரீக உலகத்தில் அனுமதிக்க முடியாதது என்று பதில் தெரிவித்தார்.
மேலும்,கொலை வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு இரு மாநிலங்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக செயல்பட்டு வருவதாகவும் முத்தரசன் குற்றம் சாட்டினார்.







