4 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள்!
இந்தியாவில் கார்பன் மாசுபாட்டைக் குறைக்கும் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அமேசான் இந்த முதலீட்டை மேற்கொள்கிறது. இதன் மூலம் இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் கார்பன் இல்லாத மின்சாரக் கொள்முதல் நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் உருவெடுத்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள நான்கு திட்டங்களில் கர்நாடகாவில் 234 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் திட்டம் அமைக்கப்பட உள்ளது. ஆசியாவிலேயே அமேசான் ஒப்பந்தம் செய்துள்ள மிகப்பெரிய காற்றாலை மின் திட்டம் இதுவாகும்.
மேலும், கர்நாடகாவில் 200 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மற்றும் காற்றாலை இணைந்த கலப்பு மின் திட்டமும், மத்தியப் பிரதேசத்தில் 300 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தித் திட்டமும், ராஜஸ்தானில் 200 மெகாவாட் திறன் கொண்ட மற்றொரு சூரிய மின்சக்தித் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்கள் (PPA) வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

35 லட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரம்!
இந்தியாவில் அமேசானின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும்போது, அதன் மொத்த மின்சார உற்பத்தித் திறன் 2 ஜிகாவாட்டைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 35 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளின் ஓராண்டு மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைக்கும் என அமேசான் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் அமேசான் நிறுவனம் மொத்தம் 57 புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் மின்சாரக் கட்டமைப்புக்கு கார்பன் மாசற்ற மின்சாரத்தை வழங்கும் 14 பெரிய அளவிலான காற்றாலை மற்றும் சூரியசக்தித் திட்டங்களும், அமேசானின் சொந்த வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள 43 சூரிய மின்சக்தி அமைப்புகளும் அடங்கும்.
2030-க்குள் கார்பன் உமிழ்வைக் குறைக்க இலக்கு!
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், தனது உலகளாவிய செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் கார்பன் உமிழ்வு தீவிரத்தை 2030-ம் ஆண்டுக்குள் 65 சதவீதம் குறைக்கும் அமேசானின் புதிய இலக்குக்கும் உதவும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்காக 2019-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு, ஒவ்வொரு யூனிட் மின்சாரப் பயன்பாட்டுக்கும் ஏற்படும் கார்பன் உமிழ்வை 65 சதவீதம் குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், 2040-ம் ஆண்டுக்குள் தனது அனைத்து செயல்பாடுகளிலும் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை எட்ட வேண்டும் என்ற இலக்கை நோக்கிய முக்கிய முன்னேற்றமாகவும் இந்த நடவடிக்கையை அமேசான் கருதுகிறது.
மத்திய அமைச்சர் வரவேற்பு!
அமேசானின் இந்த முதலீட்டுத் திட்டத்தை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற முதலீடுகள் இந்தியாவின் தூய்மையான எரிசக்தி இலக்குகளை முன்னெடுத்துச் செல்லவும், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் முக்கியப் பங்காற்றுகின்றன என்றார். மேலும், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உலகளாவிய நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், நீண்டகால முதலீடுகளை ஈர்க்கும் நாட்டின் திறனையும் இந்த முதலீடுகள் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிலைத்தன்மை அதிகாரி காரா ஹர்ஸ்ட் கூறுகையில், இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை எட்ட வேண்டும் என்ற இந்தியாவின் இலக்குக்கு பங்களிப்பதற்கும் நிறுவனம் விரும்புவதாகத் தெரிவித்தார். உலக அளவில் கார்பன் மாசற்ற மின்சாரத்தை அதிகளவில் கொள்முதல் செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் விளங்குகிறது. உலகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தித் திட்டங்களை நிறுவனம் கொண்டுள்ளது. இவற்றின் மொத்த உற்பத்தித் திறன் 40 ஜிகாவாட்டுக்கும் அதிகமாகும்.




