முடங்கிய ஆப்பிள் சேவைகள்!
அமெரிக்காவில் நவம்பர் 17 – செவ்வாய்க்கிழமை ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக இணையதளச் சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் Downdetector தெரிவித்துள்ளது. App Store, iCloud மற்றும் Apple Pay உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாகப் பலரும் புகார் தெரிவித்தனர். குறிப்பாக, தங்களது ஆப்பிள் சாதனங்களில் இருந்து iCloud கணக்குகள் தானாகவே வெளியேறியதாகவும், மீண்டும் கணக்கில் உள்நுழைய முயன்றபோது சரிபார்ப்புச் செயல்முறையில் தோல்வி ஏற்பட்டதாகவும் பயனர்கள் தெரிவித்தனர். இருப்பினும், ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ System Status பக்கத்தில் சம்பந்தப்பட்ட சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்குவதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சேவை பாதிப்பு குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.
200-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்!
இதற்கிடையே, ஆப்பிள் சேவைகள் முடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, உலகின் முக்கிய இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. BBC, HSBC UAE வங்கி, Air France, IKEA உள்ளிட்ட சுமார் 200 முக்கிய இணையதளங்கள் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகின. பயனர்களின் நிதித் தகவல்களைத் திருடுவதுடன், ஆப்பிள் சாதனங்களில் தீங்கிழைக்கும் மென்பொருளைப் பாதிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. Optimizely என்ற டிஜிட்டல் தளத்தின் மூலம் இணையதளங்களில் பயன்படுத்தப்படும் JavaScript குறியீடுகளில் ஹேக்கர்கள் தீங்கிழைக்கும் மாற்றங்களைச் செய்துள்ளனர். பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது இணையதளப் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த இந்தத் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றன.
சுமார் 7,040 டாலர் கிரிப்டோகரன்சி திருட்டு!
இந்தச் சைபர் தாக்குதல் குறித்து பாதுகாப்பு ஆய்வாளர் ஸ்காட் ஹெல்ம் தனது வலைப்பதிவில் வெளியிட்ட தகவலில், Zoom, BBC, CNN, Salesforce, GitLab, IKEA, HSBC (UAE), Equifax, Air France-KLM, Ledger மற்றும் Peacock உள்ளிட்ட உலகின் அதிகம் பார்வையிடப்படும் இணையதளங்களும் தாக்குதலுக்கு இலக்கானதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நவம்பர் 16-ம் தேதி சுமார் 9 மணி நேரத்திற்குள் தாக்குதலுடன் தொடர்புடைய கிரிப்டோகரன்சி வாலெட்டுகளுக்கு சுமார் 7,040 அமெரிக்க டாலர்கள் சென்றடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வங்கிகளிலும் தொழில்நுட்பக் கோளாறு!
இதற்கு முந்தைய நாளிலும் அமெரிக்காவின் முன்னணி வங்கிகளின் இணையவழிச் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர். Bank of America, Chase, US Bank, Wells Fargo மற்றும் Truist உள்ளிட்ட வங்கிகளின் இணையவழிக் கணக்குகளை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டதாக Downdetector தளத்தில் பயனர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து Chase வங்கியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட விளக்கத்தில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சில பணப் பரிவர்த்தனைகள் வழக்கத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும், இருப்பினும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகள் மற்றும் பணத்தைத் தொடர்ந்து அணுக முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்தப் பிரச்சினையை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.




