ரூ.52.16 கோடியில் புதிய கட்டடங்கள், தொழிற்பேட்டைகள் திறந்து வைத்தார்- முதல்வர் விஜய்!

காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மொத்தம் ரூ.52.16 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் பொது வசதி மையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

காவல் துறை, தீயணைப்புத் துறைக்கு புதிய கட்டடங்கள்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் ரூ.8.90 கோடி செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ரூ.8.41 கோடி செலவிலும் என மொத்தம் ரூ.17.31 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார். மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்கவும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் செயல்திறன் மேம்படவும், அத்துறைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

காவல் துறை சார்பில் திறக்கப்பட்ட கட்டடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.1.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஈரோடு அரசு மருத்துவமனை வளாக காவல் நிலையம், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் ரூ.1.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம், சென்னை மாவட்டம், கொத்தவால் சாவடியில் ரூ.3.99 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் ரூ.1.58 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் என மொத்தம் 4 காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கத்தில் ரூ.82.24 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்புப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு மொத்தம் ரூ.8.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறைக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தீயணைப்பு நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள்!

சென்னை தெற்கு மாவட்டம், மேடவாக்கத்தில் ரூ.3.92 கோடி செலவிலும், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் ரூ.3.13 கோடி செலவிலும், வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரில் ரூ.1.36 கோடி செலவிலும் கட்டப்பட்டுள்ள 3 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். இவற்றின் மொத்த திட்டச் செலவு ரூ.8.41 கோடியாகும்.

ரூ.20.90 கோடியில் 2 புதிய தொழிற்பேட்டைகள்!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதி-II-ல் 17.95 ஏக்கரில் ரூ.15.23 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வேளாண்மை உற்பத்தி சார்ந்த புதிய தொழிற்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டம், நாயனூரில் 29.44 ஏக்கரில் ரூ.5.67 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டை ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

பெருந்துறை தொழிற்பேட்டை – 750 பேருக்கு வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெருந்துறையில் 17.95 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.23 கோடி செலவில் 47 தொழில்மனைகளுடன் வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் பெருந்துறை பகுதி-II தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய தொழிற்பேட்டையில் மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகள் தற்போது தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யத் தயாராக உள்ளன. இதன் மூலம் சுமார் 250 நபர்கள் நேரடியாகவும், 500 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெறுவர்.

நாயனூர் தொழிற்பேட்டை – 1,800 பேருக்கு வேலை!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், நாயனூர் கிராமத்தில் 29.44 ஏக்கர் பரப்பளவில் ரூ.5.67 கோடி செலவில் 105 தொழில்மனைகளுடன் நாயனூர் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய தொழிற்பேட்டையில் மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகள் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யத் தயாராக உள்ளன. இதன் மூலம் சுமார் 600 நபர்கள் நேரடியாகவும், 1,200 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெறுவர்.

திருப்பூரில் கயிறு குழுமத்துக்கு ரூ.13.95 கோடியில் பொது வசதி மையம்!

தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகம் சார்பில், குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டம், முதலிபாளையம் கிராமத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட தென்னை நார் கயிறு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பொது வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.8.75 கோடி மாநில அரசு மானியத்துடன், ரூ.13.95 கோடி திட்டச் செலவில் 34 உறுப்பினர்களை உள்ளடக்கிய கயிறு குழுமத்திற்கான இந்தப் பொது வசதி மையம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 150 நபர்கள் நேரடியாகவும், 350 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெறுவர். இந்த மையத்தையும் முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம்!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. அளவான முதலீட்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதுடன், சமூகப் பொருளாதார வளர்ச்சி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் பெரும் பங்காற்றி வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காகத் தமிழ்நாடு அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.