மகாராஷ்டிரா மாநிலத்தில் மங்களா பீமாராவ் இங்ளே என்ற பெண் ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்ததால் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் ஊராட்சிப் பதவியில் இருக்கக் கூடாது என்ற மாநிலச் சட்டத்தின் அடிப்படையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் மங்களா பீமாராவ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அமர்வு, மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட இது போன்ற சட்டங்கள் தற்பொழுது அவற்றின் முக்கியத்துவத்தை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2003 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 3 குழந்தைகள் பிறந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 1.9 ஆக குறைந்துள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்கள் தொகை அதிகரிப்பு குறித்த அச்சம் குறைந்துள்ள நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற கட்டுப்பாடு இனி தேவையா என்று கேள்வியை எழுப்பியுள்ளனர் மேலும் ஒருவர் குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் இடையே ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவது என்பது தனிநபர் உரிமையை பாதிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான முடிவுகளை எடுக்கும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுவதாகவும், மூன்றாவது குழந்தை பெற்றார் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரை மக்கள் பிரதிநிதியாக பதவி வைக்க அனுமதிக்காமல் தடுப்பது அவரது பதவிக்கான தகுதியுடன் நேரடி தொடர்பில்லாத கட்டுப்பாடு என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மகாராஷ்டிரா பெண் ஊராட்சி தலைவர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதைக்கும் சட்டத்தின் அடிப்படை தன்மையை விரிவாக ஆராய வழக்கின் விசாரணையை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்தும் நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.




