இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது. இதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக டிம் சீபெர்ட் 38 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 30 ரன்களும், பிளேர் டிக்னர் 34 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகலை இழது 185 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 6 பந்துகளைச் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதையடுத்து ஜோடி சேர்ந்த சுப்மன் கில் – விராட் கோலி இருவரும் நிதானமாக விளையாடி இந்திய அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. பின்னர், மழை காரணமாக போட்டி 32 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு, இந்திய அணிக்கு 143 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மழைக்கு பிறகு ஆடிய விராட் கோலி அதிரடியாக ரன்களை சேர்த்து 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுமுனையில்ஆடிய கேப்டன் சுப்மன் கில் 56 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி 51 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 22.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.




