”முதல்வர் ஸ்டாலின் ஏழை மக்களை பற்றி கவலைப்படுவதில்லை”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் ஏழை மக்களை பற்றி கவலைப்படுவதில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ் நாடு முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்னும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.  அந்த வகையில் அவர் இன்று சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டியில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.  அப்போது பேசிய அவர்,

”விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் வேளாண்மை தொழிலுக்கான பயிர்கடனை இருமுறை தள்ளுபடி செய்துள்ளோம். இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இந்தியாவிலேயே அதிக நஷ்ட ஈடு வழங்கிய அரசு அதிமுக. அதிமுக அரசில் இலவச வேஷ்டி சேலை முறையாக வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் மக்களுக்கு முறையாக வழங்காமல் வேட்டி சேலையிலும் ஊழல் செய்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் இலவச மடிக்கணிணி வழங்கி சிறப்பான கல்வி கற்க வழிவகுத்து கொடுத்தோம். ஆனால் திமுக ஆட்சியில் மடிக்கணிணி வழங்குவதை நிறுத்திவிட்டனர். 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கிராம புற மாணவர்களை மருத்துவராக மாற்றிய அரசு அதிமுக அரசு.  வீட்டிலிருப்பவர்கள் மீது கவலைப்படும் ஸ்டாலின் ஏழை மக்களை பற்றி கவலைப்படவில்லை. ஏழை எளிய தாலிக்கு தங்கம் அதிமுக அரசில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் திமுக அதை நிறுத்திவிட்டது. அதிமுக அரசு வந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தொடங்கப்படும்.

அலங்கா நல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இளைஞர்கள் காளைகளை அடக்கும் காட்சி உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது. அதிமுக மீண்டும ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்று விளங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுபான கடை பார்களை எல்லாம் திமுகவினர் எடுத்து நடத்தி 24000 கோடி ஊழல் செய்துள்ளார்கள். அதிமுக ஆட்சி வந்தவுடன் ஊழல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனு ஆற்றில் மிதக்கிறது. நீட் தேர்வு ரத்துக்காக கையெழுத்து பெற்ற மனு காற்றில் பறந்து காலடியில் கிடந்தது. இதுதான் திமுகவின் செயல்.

காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக தான். 2026 ல் திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தல் 2026 தேர்தலாக அமையும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் டோக்கன் சிஸ்டம் கொண்டு வந்து உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்காமல் அதிலும் ஊழல் செய்தது திமுக”

என்று பேசி முடித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.