கோவை குண்டுவெடிப்பின் 28 ஆம் ஆண்டையொட்டி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் வெளியில் போக முடியாத நிலை உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய ஆட்சியின் தோல்வியை மறைக்க ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து வருகிறார். மேலும் அவர் பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என நினைக்கிறார். இது முதலமைச்சர் பொறுப்புக்கு அழகல்ல.
அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காதது திமுகவிற்கு புதிதல்ல. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் ஜீரோ. அவரின் கூட்டணி கட்சியினரே அவரிடம் மோதலில் ஈடுபடுகிறார்கள்” என்றார்.







