விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 இழப்பீடு: முதலமைச்சர்

மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.300 கோடியை ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக சென்னை மற்றும் டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.…

மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.300 கோடியை ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக சென்னை மற்றும் டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், டெல்டாவில் மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்தன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பயிர்சேதம் குறித்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான குழு முதலமைச்சரிடம் இன்று அறிக்கை அளித்தது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை-கார்-சொர்ணவாரிப் பயிர்கள், முழுமையாக சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஹெக்டர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்திட ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6,038 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருள்கள் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர், மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய ரூபாய் 300 கோடி ஒதுக்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.