தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் செல்கிறார். அவரது வெளிநாடு பயண திட்டங்கள் என்ன என்பதை தற்போது காணலாம்….
அடுத்த ஆண்டு ஜனவரி 10, 11 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். மே 24ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிங்கப்பூர் – இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 350 வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகளை முதலமைச்சர் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிங்கப்பூரின் வர்த்தக உறவுகளுக்கான அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், SICCI நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு – சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழல் குறித்த களத் தகவல்களைப் பெற ஆர்வமுள்ள சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு இந்த மாநாடு துணைபுரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : சரத்பாபு மறைவு – பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்!!
மே 26ஆம் தேதி ஜப்பான் செல்லும் முதலமைச்சர் அங்கு 31ம் தேதி வரை தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒசாகா, டோக்கியோ நகரங்களில் ஜப்பானிய முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலமைச்சர் அழைப்பு விடுப்பார் என்றும், ஜப்பானில் வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் சார்பாக நடைபெறும் நிகழ்வுகளில் முதலமைச்சர் பங்கேற்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது அரசு அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தவும் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.