நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் ட்விட்டர் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகர் சரத்பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை சார்பில் தகவல் வெளியானது. சரத்பாபுவின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது:
நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.










