பனைமரத்தின் சிறப்பை விளக்கும் “நெட்டே நெட்டே பனைமரமே” – புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பனைமரத்தின் சிறப்பினை விளக்கிடும் “நெட்டே நெட்டே பனைமரமே” காலப்பேழை புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பனை மரம், அனைத்து பாகங்களையும் மானுடத்திற்குக் கொடையாய் அளிக்கும் அற்புதமான மரமாகும். அதன் குருத்தோலை தோரணம் கட்டவும், அழகியல்…

பனைமரத்தின் சிறப்பினை விளக்கிடும் “நெட்டே நெட்டே பனைமரமே” காலப்பேழை புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

பனை மரம், அனைத்து பாகங்களையும் மானுடத்திற்குக் கொடையாய் அளிக்கும் அற்புதமான மரமாகும். அதன் குருத்தோலை தோரணம் கட்டவும், அழகியல் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. சாரை ஓலை, கூடை முடையவும், பாய் பின்னவும் உதவுகிறது. பச்சை மட்டை வேலி அமைக்கவும், நார் எடுக்கவும் உதவுகிறது. பனங்காய் நுங்கும், பனம்பழமும் தருகிறது. பனங்கொட்டை, கிழங்காக மாறி உண்ணப் பயன்படுகிறது.

பாளை, பதநீர் பெற உபயோகமாகிறது. ஓலை கூரை வேயவும், பதநீர், கஞ்சி போன்றவற்றை ஊற்றிக் குடிக்க உதவும், பட்டை பின்னவும் பயன்படுகிறது. உச்சிப்பகுதி, மரத்தொட்டி செய்ய உதவுகிறது. பத்தை மட்டை தும்பு எடுக்கவும், தரை தேய்க்கும் பிரஷ் செய்யவும் பயன்படுகிறது. நடு மரம், உத்தரம் செய்ய உதவுகிறது. தூர்ப்பகுதி, வட்ட வடிவிலான பத்தலாக பயன்படுகிறது. வேர் மழைக்காலங்களில் நிகழும் மண்ணரிப்பைத் தடுக்க உதவுகிறது.

இத்தகைய சிறப்புமிக்கதும் தமிழ்நாட்டின் மாநில மரமான பனையின் முக்கியத்துவம் கருதி, 2021-22ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனைமரத்தின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும், பனை பொருட்களை மதிப்புக் கூட்டுதல் மூலம் பனைத்தொழிலை மேம்படுத்தவும், பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வியக்கம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : பக்ரீத் பண்டிகையை வேலை நாளாக அறிவித்த டெல்லி பல்கலைக்கழகம் – பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு!!

அதன் தொடர்ச்சியாக, வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் பனையின் சிறப்பினை பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள “நெட்டே நெட்டே பனைமரமே” என்ற காலப்பேழை புத்தகத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.